சேலத்தில் கேரளவாசிகள் அத்தப்பூ கோலம் போட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை எளிமையுடன் கொண்டாடினர். கேரள மாநில மக்களின் மிகவும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது திருவோணம். இந்த பண்டிகை கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள கேரள மக்களால் அந்தந்த மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பலரும் உயிரிழந்ததால் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதன்படி சேலத்தில் வசிக்கும் கேரளா மக்கள் புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.
சேலம் தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரளா சமாஜத்தில் கேரளா பெண்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோலத்தைச் சுற்றிலும் ஆட்டம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர். கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுத் போட்டிகளுடன் கலை கட்டிய ஓணம் பண்டிகை இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது.