சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் மேயர், எம். எல். ஏ. ஆகியோர் குறைகள் கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. ஆகியோர் நேற்று 35-வது வார்டில் தேசிகன் தெரு, அழகப்பன் தெரு, பண்டரிநாதன் தெரு உள்பட பல்வேறு இடங்களில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர்.
அப்போது, அவர்களிடம் குடிநீர், சாக்கடை கால்வாய், சாலை வசதி, வீடு கட்டுவதற்கு கடனுதவி, தொழில் கடன், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதையடுத்து அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர், எம். எல். ஏ. வாக்குறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மனுக்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்து உடனடி தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த நிகழச்சியில் மண்டலக்குழு தலைவர் தனசேகரன், அம்மாப்பேட்டை உதவி கமிஷனர் வேடியப்பன், பகுதி தி. மு. க. செயலாளர் ராஜா, கவுன்சிலர்கள் பச்சையம்மாள், தெய்வலிங்கம், திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.