நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சேலம் நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்கு சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று பாதுகாப்பு வசதிகள், வாக்குப்பெட்டிகள் வைப்பு இருப்பு அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்வதற்காக தனி பாதைகள் அமைக்க வேண்டும்.
தடுப்பு வேலிகள்
தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இடங்கள், தபால் வாக்குகள் இருப்பு வைப்பதற்கான அறைகளில் தேவையான பாதுகாப்பு, மின்சாரம், வாக்கு எண்ணும் இடங்களில் தேவையான தடுப்பு வேலிகள், வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் அமைக்க வேண்டும். அதன்படி வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.