சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் விநாயகம்பட்டி டெலிபோன் காலனியை சேர்ந்த அன்பழகன், பீகாரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் கோவிந்தன் என்பது தெரியவந்தது. ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து கோவிந்தன் மட்டும் தப்பிஓடிவிட்டார். இதனால் அன்பழகன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.