சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(செப்.6) நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: -
பருவமழை பெய்துவரும் இக்காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகிறது என்பதால் வீட்டில் மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் ஊராட்சி ஒன்றியங்களில் 400 பணியாளர்களும், பேரூராட்சிகளில் 320 பணியாளர்களும், நகராட்சிகளில் 178 பணியாளர்களும், மாநகராட்சியில் 700 பணியாளர்கள் என மொத்தம் 1, 598 களப்பணியாளர்கள் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.