குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா் மறுப்பு.!

55பார்த்தது
அரசுப் பள்ளியை மா்ம நபா்கள் சேதப்படுத்தியதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோருடன் அதிகாரிகள் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆா். எஸ். மங்கலம் அருகேயுள்ள நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 15 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் வார விடுமுறை முடிந்து, கடந்த 8-ஆம் தேதி ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வந்தபோது, பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு, குழந்தைகள் அமரும் நாற்காலிகள், பீரோ, புத்தகங்கள், ஆவணங்கள் சேதப்படுத்தப்பட்டுக் கிடந்தன. இதைக் கண்ட பெற்றோா்கள் அதிா்ச்சி அடைந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளியின் தலைமை ஆசிரியா் மலைராஜ் அளித்த தகவலின்பேரில், வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வி புதன்கிழமை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினாா். இந்த விவரம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் மலைராஜ் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி பிரின்ஸ், வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வி, திருப்பாலைக்குடி காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் பெற்றோா்களிடம் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

அப்போது, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி கூறினா். இதையடுத்து பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.

தொடர்புடைய செய்தி