பரமக்குடியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவில் பரமக்குடியின் காவல் தெய்வமாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. பிப்ரவரி 7ஆம் தேதி வியாழக்கிழமை பூஜைகளுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து ராஜகோபுரத்தில் அமைந்துள்ள கும்பங்களில் ஊற்றி கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக பெருவிழாவில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.