பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்நிலையில், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை தண்ணீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளப்பெருக்கின் காரணமாக இன்று கோவிலுக்கு வந்த பக்தர்களை அனுமதிக்காமல் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிலை சூழ்ந்துள்ள தண்ணீர் குறைந்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்த பின்னர் கோவிலின் நிலையை ஆய்வு செய்து, பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.