வடமாநில தொழிலாளர்களுடன் போலீசார் கலந்துரையாடினார்கள்

1516பார்த்தது
வடமாநில தொழிலாளர்களுடன் போலீசார் கலந்துரையாடினார்கள்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மராட்டியம், குஜராஜ், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தேயிலை எஸ்டேட்கள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி கட்டிட வேலை, ஓட்டல், பேக்கரி, வணிக வளாகங்கள் என அனைத்து தொழிலிலும் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது போன்றும் சித்தரித்து தவறான தகவல்களையும், போலி வீடியோக்களையும் சிலர் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினர். இதையடுத்து அவ்வாறு தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. மேலும் வட மாநில தொழிலாளர்களின் அச்சதைப் போக்கும் வகையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் விழிப்புணர்வு இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் போலீஸ் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் மற்றும் போலீசார் கடந்த சில தினங்களாக சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் பேசியும், போலீஸ் உயர் அதிகாரிகளின் விழிப்புணர்வு வீடியோவைக் காண்பித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாரும் சொந்த மாநிலத்திற்கு செல்லவில்லை என்றும், தங்கள் குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளிகளில் படித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக போலீசாரை அணுகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you