பாடத்துக்குள் ஒரு படம்; மனதில் பதியும் தடம்

64பார்த்தது
பாடத்துக்குள் ஒரு படம்; மனதில் பதியும் தடம்
விழிப்புணர்வு. அனைத்து பருவத்தினருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆரம்ப கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை, விழிப்புணர்வு அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக இருக்க வேண்டியுள்ளது. அடுத்த கட்ட நகர்வுக்கு, இது நிச்சயமாக உதவும்.

மாணவர்களிடையே கற்றல் அறிவு மேம்படவும், பள்ளிக்குச் செல்லும் ஆர்வம் அதிகரிக்கவும், பள்ளி வகுப்பறை சுவர், வெளிப்புறச் சுவரில் பல்வேறு ஓவியங்கள் தீட்டும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குழந்தைகளின் கல்வி உரிமை, பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தூய்மை, சுகாதாரம் குறித்து சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

பாடங்களை ஓவியமாகவும், திரைவடிவிலும் ஒளி - ஒலி வடிவில் மாணவர்கள் கற்க முற்படும்போது, சிறந்த கல்வி ஞானத்தை பெறமுடிகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகிறது.

திருப்பூர் பாண்டியன் நகர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்தோஷ்குமார் தலைமையிலான ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து 'திருப்பூர் பட்டாம்பூச்சிகள் அரசு பள்ளிகளை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மலைப் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தேர்வு செய்து ஓவிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பகுதியாக கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமமான தெங்குமரஹடா அரசு பள்ளியில் உள்ள சுவர்கள் மற்றும் வகுப்பறைகளில் அழகிய ஓவியங்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, காண்போர் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.

இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'ஓவியம் வரைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, மாணவர்களுக்கு எளிதில் புரிகிறது. பாடம் படிப்பதை விட, இம்மாதிரி ஓவியங்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும். இந்த அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்' என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி