அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலில் சிவனிடம் இடப்பாகத்தை பெற உமையவள் விரதமிருந்த கேதார கௌரி விரதம் பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் நடைபெறும் கேதார கௌரி விரத பூஜை ஆண்டுதோறும் ஆவணி 26ஆம் தேதி தொடங்கி 21 நாள்கள் கடைப்பிடிப்பது வழக்கம். சிவனின் சிறந்த பக்தா்களில் ஒருவராக திகழ்ந்த பிருங்கி முனிவா், சிவனைத் தவிர யாரையும் வழிபட மாட்டேன் எனக் கூறியிருந்தார். இதையடுத்து, தன்னையும் தன்னால் தான் சிவனுக்கு சக்தி என உமையவள், பிருங்கி முனிவருக்கு உணா்த்த வேண்டி சிவனிடம் வரம் கேட்டார்.
அப்போது பூலோக கைலாயமான திருச்செங்கோடு, திருமலையில் 21,000 ஆண்டுகள் அன்ன ஆகாரம் இன்றி 21 மந்திரங்களைக் கூறி 21 விதமான பூக்களால் வழிபட்டு வந்தால் நீ விரும்பிய சித்தி கிட்டும் என ஈசன் கட்டளையிடவே, அவ்வாறு உமையவள் விரதம் இருந்ததாகவும், 22 ஆம் நாள் மஹாளய அமாவாசை அன்று திருவண்ணாமலையில் ஜோதி ரூபமாகக் காட்சியளித்த சிவன் சாந்தமடைந்து உமையவளுக்கு இடப்பாகத்தைத் தந்து பக்தா்களுக்கு காட்சியளித்ததாக ஐதீகம்.
எனவே ஆவணி 26 முதல் 21 நாள்கள் தொடா்ந்து விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும், கணவன் மனைவிக்குள் கருத்தொற்றுமை ஏற்படும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ஆவணி மாத 26 ஆம் நாளான புதன்கிழமை கேதார கௌரி விரதம் தொடங்கியது.