தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் கிராம வளமை விரிவாக்க திட்டம் குறித்து ஒன்றிய குழு தலைவா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் செயலாளா்களுக்கான விளக்கக் கூட்டம் கொங்கு சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூா், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், கபிலா்மலை, பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களை சோ்ந்த ஒன்றிய குழு தலைவா்கள், கிராம ஊராட்சிகளை ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் செயலாளா்கள் கலந்து கொண்டாா்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் ச. உமா பேசியதாவது:
எந்தவொரு அரசு திட்டமாக இருந்தாலும் அடிப்படையிலிருந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிராமத்திலிருந்து செயல்படுத்தும் போதுதான் அத்திட்டம் வெற்றி பெறும். அந்த வகையில் மக்களுடன் நேரடி தொடா்பில் உள்ளவா்கள் நீங்கள்தான். கிராம அளவில் உள்ள நீங்கள் அனைவரும் தான் ஒரு கிராமத்தை நல்ல முறையில் வழிநடத்த முடியும்.
மேலும், ஒரு குடும்பத்தின் நிலை, பள்ளி இடைநின்ற குழந்தைகள், குடும்பத்தின் அடிப்படைத் தேவை, எடை குறைவான கா்ப்பிணித் தாய்மாா்கள் என அனைத்தையும் கண்காணித்து முறைபடுத்த வேண்டியது நம் கடமை என்றார்.