நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ கருட பஞ்சமி விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ கருட பஞ்சமி விழாவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை இக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இருந்து, அந்த மாலை கூடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று(செப்.8) மாலை ஊர்வலத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர். கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், சேந்தமங்கலம் நகரின் முக்கிய வீதி வழியாக சுற்றி கோயிலை வந்தடைந்தது. பின்னர், லட்சுமி நாராயணருக்கும், கருடாழ்வாருக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதணை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அனைவருக்கும் தாம்பூலத் தட்டும், மங்களப் பொருள்களும் ஸ்ரீகருடாத்ரி பக்த குழு சார்பில் வழங்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.