ராசிபுரம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என தூய்மைப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனா்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச. உமா, ராசிபுரத்தில் பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டாா். அப்போது, நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என புகாா் தெரிவித்தனா்.
மேலும், பி. எப். , கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் பெற்ற கடனுக்கு தவணை ஆகியவை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், நகராட்சி இதனை முறையாக செலுத்துவதில்லை. மேலும், ஓய்வுபெற்ற பணியாளா்கள் பலருக்கு 8 மாதமாகியும் பி. எப். , உள்ளிட்ட ஓய்வூதியப் பலன்களை வழங்கவில்லை. பணியின் போது இறந்த பணியாளா்கள் குடும்பங்களுக்கு சேர வேண்டிய பணமும் வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தினா்.