நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் ஐவேலி எனும் பெயருடைய 80 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இங்கு விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிரும், உளுந்து, பயறும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த நிலப்பரப்பிற்கு செல்வதற்கு வாளாமங்கலத்தில் வடக்கு புத்தாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்த 80 ஏக்கர் நிலப்பரப்பை விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருட்கள், உரங்கள் மற்றும் நெல் அறுவடை செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் இவை அனைத்தும் 6 கிலோமீட்டர்கள் திருமருகல் கிராமத்தை சுற்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டியுள்ளது. மழைகாலங்களில் ஆற்று கரைகள் இடிந்து விழுந்து விடுகின்றன இதனால் அவற்றை சுற்றியும் வரமுடியாத நிலை உள்ளது. கடந்த மூன்று தலைமுறையாக கோடைகாலங்களில் மட்டும் வண்டி பாதையாக சென்று வந்த பாதையும் பொதுப்பணித் துறையால் கரையை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஐவேலி பகுதிக்கு செல்ல ஏதுவாக வடக்கு புத்தாறு ஆற்றில் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.