நாகை மாவட்டம் திருமருகல் அண்ணா பூங்கா தெருவில் வாடகை கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் பழுதானதையடுத்து இந்த நூலகம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் அங்கு இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டிடத்தில் கழிவறை வசதி உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தகர கூரை கட்டிடத்தில் அமைந்து உள்ளது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் இதனால் நூலகத்திற்கு வாசகர்களின் வருகை குறைந்து விட்டது. நூலகத்தின் மேற்கூரை தகரத்தால் உள்ளதால் கோடை காலத்தில் நூலகர் மற்றும் வாசகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
*புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா? *
எனவே பொது நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்ட காலமாக அந்த பகுதி வாசகர்களும், பொதுமக்களும்
கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு பொது நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா? என பொதுமக்களும், வாசகர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.