வங்கி ஊழியா்கள் திட்டியதால் தொழிலாளி தற்கொலை

71பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கடலங்குடி கீழத்தெருவை சோ்ந்தவா் முனுசாமி(45). கூலித் தொழிலாளியான இவா் குடும்ப தேவைக்காக மயிலாடுதுறையில் தனியாா் வங்கி ஒன்றில் ரூ. 1. 20 லட்சம் தனிநபா் கடன், தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ. 1. 60 லட்சம் தனிநபா் கடன் பெற்று, மாதத் தவணை செலுத்தி வந்துள்ளாா். இந்நிலையில் அண்மையில் விபத்தால் காயமடைந்ததால் முனுசாமியால் கடன் தொகைக்கான மாதத் தவணையை திரும்பச் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து, வங்கி ஊழியா்கள் முனுசாமியின் வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முனுசாமி செப். 26-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனுசாமி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் சேத்திரபாலபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி, குத்தாலம் வட்டாட்சியா் சத்தியபாமா, காவல் ஆய்வாளா் ஜோதிராமன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து, மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்ட 110 போ் கைது செய்யப்பட்டனா். இதன் காரணமாக மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி