மதுரை மாநகரில் திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவதால் திருவிழாக்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் , ரம்ஜான் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி, சித்திரை, வெளி வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து செல்வார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தென் மாவட்ட மக்கள், புத்தாடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பலகாரம் செய்வதற்கான மளிகைப்பொருட்கள், வீட்டை அலங்கரிப்பதற்கான அலங்காரப்பொருட்கள் போன்ற பல்வேறு வகை பொருட்களை வாங்க முனைந்துள்ளதால், விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது.
பூஜை விடுமுறை நாட்களையொட்டி, ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களும், மதுரையில் புத்தாடைகள், பல்வகை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு திரண்டனர். இன்று காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியதால் மீனாட்சியம்மன் கோயில் கடை வீதிகள் திணறின. மக்கள் நடந்து செல்லக்கூட போக முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் இன்னும் கூட்டம் அதிகமாக மதுரைக்கு வர உள்ளதால் மாநகர காவல் துறையும பொதுமக்களுக்கு தங்களின் பாதுகாப்புக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.