மதுரை: தைப்பூசத் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

74பார்த்தது
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச திருவிழா நடைபெறும் வழக்கம். இவ்விழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தைப்பூச திருவிழா இன்று தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவ நாளான வரும் 11ஆம் தேதியன்று அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமர்சையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்து, மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெற்று, மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும். தெப்பத்திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளான மிதவை தெப்பத்தேர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி