மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி. மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே, அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை. 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.