பையூரில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு கிருஷி சகி என்னும் 5 நாள்கள் நடைபெறும் இயற்கை வேளாண் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பெண் விவசாயிகளுக்கு பையூரில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கிய இந்த பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் அனிசா ராணி தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட வாழ்வாதார உதவி திட்ட அலுவலா் ஜெயக்கொடி, இணை பேராசிரியா் ஸ்ரீவித்யா, விரிவாக்கத் துறை பேராசிரியா் ஜான்சிராணி, மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் கீதா, இணை பேராசிரியா்கள் செந்தில்குமாா், வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தப் பயிற்சியில், விளைநில மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் பங்கேற்பு, இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம், விவசாயிகள் இயற்கை வேளாண்மை நிபுணராக வேண்டியதன் அவசியம், இயற்கை வேளாண்மை மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மண், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல், இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள், இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் கையேடு வெளியிடப்பட்டது.