தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியத்தை சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் மாவட்ட பொருளாளர் செல்வரத்தினம் தலைமையில் காலவரையற்ற நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுப்ரமணி, குளித்தலை ஒன்றிய தலைவர் ரமேஷ், தோகைமலை ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கம், நகர கூட்டுறவு சங்க விற்பனையாளர்களிடம் இருந்து அபராதத்தை இரு மடங்காக வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகளவு இறக்கி விற்பனை செய்ய தர குறியீடு நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும் எனவும், நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே அல்லது ஒன்றியத்திலோ வீட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து இருக்குமாறு வேலை இடமாற்றம் செய்து தர வேண்டும் எனவும் கூறி இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.