கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம் முன்பு கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 13 ஆவது வார்டை மறுசுழற்சி அடிப்படையில் தனி வார்டாக மாற்றிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்கிற வன்னியரசு தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் உதயநிதி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்திடவும், சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுக்கும் நபர்களை கைது செய்ய வேண்டும், பேரூராட்சியில் சமுதாயக்கூடம், புதிய கழிப்பிடம், அரசு நடுநிலைப் பள்ளியில் கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீரராக்கியம் லோகநாதன், சேங்கல் பூபதி, முனையனூர் பசுபதி, சங்கரமலைப்பட்டி ரஞ்சித், ஆண்டிபாளையம் உதயகுமார் மற்றும் கோவக்குளம், முனையனூர், சேங்கல், சங்கரமலைப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் 13 வது வார்டு கிளை செயலாளர் பார்த்திபன் நன்றியுரை ஆற்றினார்.