

நாகர்கோவிலில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில வாணிப கழக நாம் தமிழர் தொழிற்சங்கம் மாநிலத் தலைவர் மோஸ்லின் பியர்சன் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் மாநில ஆலோசகர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பணி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி பணியின் போது உயிரிழந்தால் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றிட வேண்டும். இ. எஸ். ஐ மருத்துவத் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள மதுக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று தமிழகத்திலும் வழங்கவேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு ஓய்வு பெற்ற போலீசார் அல்லது ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் சஜிதகுமார், மாநில அமைப்பு செயலாளர் சாமி உள்பட நிர்வாகிகள் ஹிம்லர், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.