நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் மகளிரணி சார்பில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று மாலை கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும், விலை உயர்வு மற்றும் வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட மகளிரணி தலைவி சோனி விதுலா தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆர். எ. ராஜன், கரோலின் ஜெபா, ராஜேஷ் வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வால் சமையல் கியாஸ் சிலிண்டரை ஏழைகள் வாங்க முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் இறுதி சடங்கு செலுத்தும்படி காலி கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இருந்தனர். மேலும் இனி பழையபடி விறகு அடுப்புக்கு மாற வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் விறகுகளை சிலிண்டருக்கு மேல் வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.