குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34) இவர் அந்த பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவர் கொக்கோடு என்ற இடத்தில் உள்ள தனது சொத்தில் ஒரு ஓலை ஷெட் அமைத்து, அதில் மின்மோட்டார் மற்றும் எலக்ட்ரிக் உதிரி பாகங்கள் வைத்து இருந்தார். இந்த நிலையால் அடிக்கடி அந்த ஷெட்டில் இருந்து திருட்டு நடந்து வந்தது. நேற்று முன்தினமும், ஒரு நபர் அங்கு திருட முயன்றார். அந்த நபரை ராஜேந்திரன் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த நபர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கத்தியை காட்டி தப்பி ஓடியவர் குமாரபுரம் நெக்கட்டன்பாறை பகுதி சேர்ந்த ராஜ்குமார் (31 ) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.