நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தலைமையில் மாவட்ட தலைவர் தீபக் சாலமன் மற்றும் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் ஏராளமானோர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - மருங்கூர் அருகே ராமநாதிச்சன்புதூர் ஊரின் நடுவே அரசுக்கு சொந்தமான பேரல் குளம் உள்ளது. தற்போது இந்த குளம் பெரியகுளம் என அழைக்கப்படுகிறது. இந்த குளமானது அப்பகுதி மக்களுக்கும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
ராமநாதிச்சன்புதூர் வடக்கூர் மற்றும் தெற்கூர் என இரண்டு பிரிவுகளாக இருந்து வந்தது. அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகிருஷ்ணாபுரம் என்ற ஊர் உருவாக்கப்பட்டு அந்த குளத்தின் கரையோரம் புறம்போக்கு நிலங்களில் மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தி சுமார் 125 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, கிருஷ்ணாபுரம் மற்றும் ராமநாதிச்சன்புதூர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குடியிருப்புகளை அகற்றாமல் பொது மக்களுக்கு முறையான பட்டா வழங்க வேண்டும். அல்லது அவர்களுக்கு அப்பகுதியிலேயே வசிக்க முறையான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.