குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மெல்கியாஸ் மகன் சுகின் (39). கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி (36) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. கடந்த 4-ம் தேதி சுகின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சீஜூ பாலன் என்பவரின் விசைப்படகில் கொச்சி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றார். விசைப்படகை கோடிமுனை பிரிட்டோ என்பவர் ஓட்டிச் சென்றார். இவர்களுடன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மீன்பிடித் தொழிலாளர்களும் இருந்தனர். விசைப்படகு நேற்று முன்தினம் கொச்சி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது.
அப்போது மீன்பிடித்துக் கொண்டிருந்த சுகின் திடீரென மயங்கி விசைப்படகில் சரிந்தார். பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசைப்படக் உரிமையாளர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுகின் உடலை விசைப்படையில் வைத்த மீனவர்கள் கொச்சி துறைமுகம் நோக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அவரது உடல் இன்று மதியம் அல்லது மாலைக்குள் கொச்சி துறைமுகம் வந்தடையும் என மீனவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு குளச்சல் கொண்டு வரப்படும்.