நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் சந்தியாதேவி. திருநங்கையான இவர் தற்போது தோவாளையில் வசித்து வருகிறார். இவர் முதல் திருநங்கை வில்லிசை கலைஞர் என்ற பெருமை பெற்றவர். வில்லிசையின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்கள், மற்றும் கலாச்சார விழாக்களில் சந்தியா தேவி வில்லிசை கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
சுமார் 25 ஆண்டுகளாக வில்லிசை கலையை சந்தியா தேவி பரப்பி வருகிறார். மேலும், பொதுச்சேவை மற்றும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் சந்தியா தேவி ஆர்வம் காட்டி வந்தார். மேலும் தோவாளை ஊராட்சி 4-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், வார்டு உறுப்பினராகி மக்கள் சேவை ஆற்றி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காலகட்டத்தில், சமூக இடைவெளி விட்டு தோவாளை 4வது வார்டு பகுதி மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் அங்குள்ள கோயில்களில் சமூக இடைவெளியுடன் தனது வில்லிசை குழுவுடன் அமர்ந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி வந்தார்.
அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வை, திருநங்கை கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி வருவதை பாராட்டி , 2023 - 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகான விருது ரூ. 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.