பார்வதிபுரம், பொன்னர் நகர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி இசக்கியம்மாள் (வயது 37). மணிகண்டன் டிரைவராக உள்ளார். இசக்கியம்மாள் நேற்று வீட்டை பூட்டிவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக பார்வதிபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து அதில் இருந்த மூன்று பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது உடனடியாக இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
கொள்ளை சம்பவம் குறித்து இசக்கியம்மாள் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இசக்கியம்மாள் கடைக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.