ஞாயிற்றுகிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியி லும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கருமேகம் திரண்டு மழை தூறி கொண்டிருந்ததால் இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சூரியன் உதயமான காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. காலை 8. 30 மணிக்கு மழை நின்றதை தொடர்ந்து ½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து படகு துறையில் சுற்றுலா பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.