கருங்கல் அருகில் உள்ள ஆலஞ்சியில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இதன் அருகில் ஆலயத்தின் அருட் சகோதரிகள் தங்கும் கன்னியர் இல்லம் அமைந்துள்ளது. அங்கு நான்கு அருள் சகோதரிகளும் ஒரு சமையலரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவ தினம் காலை ஆறு மணி அளவில் அருள் சகோதரிகள் ஆலயத்திற்கு சென்றனர். அங்கு திருப்பலி முடிந்து திரும்ப வந்த போது கன்னியர் இல்லத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததுடன், அறைகளில் 3 பீரோக்களில் இருந்த ரூபாய் 82 ஆயிரத்தை காணவில்லை.
இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தினம் அதிகாலையில் ஆலயத்தில் வந்த ஒரு நபர் அங்கு இருந்தவர்களிடம், தங்கி உள்ள அருள் சகோதரிகளை தனக்கு தெரியும் என பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம நபர் ர் கன்னியர் இல்லத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாக சிலர் கூறினார்.
இதனால் அந்த நபர் தான் பணத்தை திருடியதாக போலீசார் கருதுகிறார்கள். மேலும் அவரது உருவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகிறார்கள்.