தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசியதாவது: - கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கியமான பத்மநாபுரம் - புத்தனூர் கால்வாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. அதேபோல பல இடங்களில் உடைந்து கிடக்கிறது. எனவே உடைந்த பகுதிகளில் பக்கச்சுவர் ஏற்படுத்துவதுடன், கால்வாயை தூர்வாரியும் தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், உறுப்பினர் சொன்ன கால்வாய் மட்டுமல்ல, பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடுகிற ஆறுகள் எல்லாம் கடந்த பெருமழையால் கரைகள் அரிக்கப்பட்டு தெருவுக்கும், கரைக்கும், ஆற்றுக்கும் வித்தியாசம் தெரியாத நிலைமை நீள்கிறது. இதை ஒரு பெரும் முயற்சி எடுத்து, பெரும் திட்டத்தோடு, ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால் தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். எனவே உறுப்பினர் சொன்னதை தனிக் கவனமாகச் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்றார்.