இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் கான்வென்ட் வளாகத்தை சேர்ந்தவர் அருளப்பன். இவருக்கு சொந்தமான அலங்காரமாதா என்னும் பெயர்கொண்ட விசைப்படகில் அருளப்பன் உட்பட 12 பேர் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து செப்டம்பர் 11-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
செப்டம்பர் 15-ம் தேதி இயந்திரக்கோளாறு ஏற்பட்டு ஓமன் ஆழ்கடலில் தத்தளித்து வருவதாக விசைப்படகு உரிமையாளரின் வீட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. படகிலுள்ள 12 மீனவர்களில் 6 பேர் பாண்டிச்சேரி, 2 பேர் மேற்கு வங்காளம், 3 பேர் இரவிபுத்தன்துறை, 1 நபர் பூத்துறை மீனவர் கிராமத்தை சார்ந்தவர்களென படகின் உரிமையாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகும், 12 மீனவர்களும் ஆழ்கடலில் தத்தளிப்பதால் இவர்களது உறவினர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து படகையும் மீனவர்களையும் மீட்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் புதுடெல்லியிலிருந்து இன்று (27. 9. 2024) காலை சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைக்கு கிடைத்த தகவலின்படி 12 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், ஆனால் விசைப்படகை மீட்பதில் பெருத்த சிரமம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.