அரசூர் பழைய காலனியில் மேல்நிலை தொட்டி அமைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே வன்னியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட அரசூர் பழைய காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, புதிய காலனியில் உள்ள, 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, புதிய காலனி மற்றும் பழைய காலனி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால், அரசூர் பழைய காலனி பகுதிக்கு, தனியாக மேல்நிலைத் தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ், 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை தேக்கத் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணி துவங்கி, கட்டி முடிக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.