காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஒட்டியுள்ள தாமல்வார் தெரு வழியாக சேக்குபேட்டை, ஏகாம்பரபுரம், பி.எஸ்.கே. தெரு உள்ளிட்ட பிற பகுதிக்கு செல்வோரும், சேக்குபேட்டையில் உள்ள இரு மாநகராட்சி பள்ளி செல்லும் மாணவர்கள் மாணவியர் இத்தெரு வழியாக செல்கின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடையை சாலை வரை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் டூவீலர் பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவோர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், சாலையின் அகலம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, காலை, மாலையில், பள்ளி, அலுவலக நேரங்களில் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மதுராந்தோட்டம் தெருவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.