காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அமரம்பேடில் இருந்து, நல்லுார், சோமங்கலம் செல்லும் சாலையில், அமரம்பேடு அருகே சிறுபாலம் அமைக்கும் பணி நடக்கிறது. கட்டுமான பணிக்கு சாலையில் பள்ளம் தோண்டியதால், அங்கு தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த மண் சாலை மழையால் சேதமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமரம்பேடு ஊராட்சியினர் கூறியதாவது: பாலம் கட்டுமான பணி அருகே உள்ள தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், அமரம்பேடு கிராமத்தினர் கூடுதலாக 6 கி. மீ. சுற்றிக் கொண்டு மாற்று சாலையில் நல்லுார், சோமங்கலம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், தனியார் பள்ளி வாகனங்கள் அமரம்பேடு உள்ளே வருவதில்லை.
பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள தற்காலிக மண் சாலை அருகே 5 அடி ஆழத்தில் நீர் நிரம்பிய பள்ளம் உள்ள நிலையில் அங்கு தடுப்புக்கள் ஏதும் இல்லை. இதனால், சேதமான தற்காலிக மண் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள தற்காலிக மண் சாலையை கற்கள் கொட்டி வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும். மேலும், அங்கு தடுப்புக்கள் அமைத்து, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.