மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து மெழுகுவத்தி ஏந்தியும் செல்போன் மூலம் டார்ச் அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.