காஞ்சிபுரம் சங்கூசா பேட்டைக்கும், காமராஜர் வீதிக்கும் இடையே மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள பாவாஜி தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடியது.
இதையடுத்து, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், பாவாஜி தெருவில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை முறைப்படி சீரமைக்கவில்லை. பள்ளம் மீது மண் குவியலாக போடப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
எனவே, குடிநீர் குழாய் சீரமைப்புக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் தார் ஊற்றி சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்என, அப்பகுதியினர்வலியுறுத்தி உள்ளனர்.