செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா எதிரில், வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, திறந்த நிலையில் உள்ள தண்டவாளப் பகுதியை, பாதையாக அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.
ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தோர், இந்த பாதையில், பல ஆண்டுகளாக, ஆபத்தான முறையில் கடந்துசென்று வந்தனர். மேலும், இந்த இடத்தில் கடக்கும் கால்நடைகள், ரயில்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், அப்பகுதியில் திறந்த நிலையில் உள்ள பாதையை, நேற்று முன்தினம் (செப் 11) சிமென்ட் கல் துாண் பயன்படுத்தி, யாரும் கடந்து செல்ல முடியாதபடி அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த அப்பகுதிவாசிகள், ரயில்வே பாதையை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்ததும் ஓட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள் நடந்து செல்லும் அளவிற்கு பாதை விட வேண்டும் என, கூறினர். அதற்கு, ரயில்வே அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து, ஒருவர் நடந்து செல்லும் வகையில் பாதை விட்டு, மற்ற இடங்களை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.