செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை ஆனந்த் என்பவர் ஓட்டி வந்தார் அப்போது கூடுவாஞ்சேரி அருகே வந்த போது முன்பக்கத்தில் இருந்த இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.
இதனைக் கண்ட கார் ஓட்டுநர் ஆனந்த் காரை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி இன்ஜினில் மூடியை திறந்துள்ளார். அப்போது மளமளவென கார் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் ஆனந்த் மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் கார் முழுவதும் தீப்பற்றி முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் எந்தவித தீக்காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.