சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், பெருமாள் கோவில் தெருவில், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 5. 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது.
பெருமாள் கோவில் தெருவில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. பயன்பாடு இல்லாத இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைத்து, அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசி ஒருவர் கூறியதாவது:
நான் இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இங்கு, முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனால், தற்போது கழிவு நீர் கால்வாய் வசதியே இல்லாத இடத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைத்து, அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.