காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி ரேவதிபுரம் பிரதான சாலையில், வங்கிகள், தனியார் பள்ளிகள், மருந்தகம் உள்ளிட்டவை உள்ளன. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்தும் முக்கிய சாலையாக, இது உள்ளது.
இந்த சாலையில், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், பணிக்கு செல்லும் பெண்கள், முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு வரும் முதியோர் என, எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில், தினமும் மாடுகள் சாலையில் ஆங்காங்கே நின்று கொண்டு, போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. நேற்று (செப்.7) இந்த சாலையில், இரு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதால் அப்பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது, அபராதம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகளில் அதிகமாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.