உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம், உத்திரமேரூர் - -வந்தவாசி சாலையில், பாலசுப்ரமணியம் கோவில் எதிரே இயங்கி வருகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், போதிய இடவசதியின்றி இயங்கி வரும் இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருந்தது.
இந்நிலையில், 2024- - 25ம் ஆண்டு, மூலதன மானிய திட்டத்தின் கீழ், 1 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகள் துவங்கும். செயல் அலுவலர் அறை, பேரூராட்சி தலைவர் அறை, அலுவலக அறை, கார் பார்க்கிங், கூட்டரங்கு என, அனைத்து வசதிகளும் இதில் இடம் பெற உள்ளது.