உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட நைனாக்குப்பம் கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் இன்றி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் எனக் கூறி ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நைனாக்குப்பம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகல் 3: 00 மணியளவில் காலி குடங்களுடன் உளுந்துார்பேட்டை- கொக்கம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததைத் தொடர்ந்து, மாலை 4: 30 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.