திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து திமுக தலைமையை நோக்கி கோரிக்கையை வைப்பதும், அதை திருமாவளவன் அது அவர்களின் சொந்த கருத்து எனக் கூறுவதும் வாடிக்கையாகி வருகிறது. முன்னதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.
பின்னர் த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் பெரும் விவாவதமாக மாறிய நிலையில், அவரை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து விசிக தலைமை உத்தரவிட்டது. பின்னர் அவரே அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது விசிகவின் மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான வன்னியரசு வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளையாவது குறைந்தது கேட்டுப்பெற வேண்டும். இதுவே அடிப்படை தொண்டனின் மனநிலை எனக் கூறியிருக்கிறார்.
இதனிடையே, வன்னியரசின் இந்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தேர்தலுக்கு முன்கூட்டியே இவ்வளவு தொகுதிகள்தான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம் ஒரு நிபந்தனையாக நாங்கள் எப்போதும் வைத்தது இல்லை. வன்னியரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். இதனால் திருமாவளவன் நேரடியாக தனது கோரிக்கைகளை கூட்டணி கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் தனது நிர்வாகிகள் மூலம் மறைமுகமாக கேட்க முயல்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.