பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை சாலையோரம் வீசிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் கட்டப்பையில் வைத்து மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். குழந்தை அழுகுரல் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அக்குழந்தையை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பச்சிளம் குழந்தையை கட்டப்பையில் வைத்து வீசியது யார்? என்பது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.