ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், வடவள்ளி, தாண்டாம்பாளையம், ராஜன்நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் மல்லிகைப் பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் மல்லிகைப்பூக்கள், சம்பங்கி மற்றும் செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிற்கும் மற்றும் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாகவும், மேலும் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் நடைபெறும் முகூர்த்தங்கள் காரணமாக பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (பிப்ரவரி 2) சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4740 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் மற்ற பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.