சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. யாகைள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஓட்டியுள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் தாளவாடி அருகே முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமன் 36 தோட்டத்தில் ராகி பயிரிட்டிருந்தார் ராகி பயிர் அறுவடையாகி வரும் நிலையில் காட்டு யானைகளால் ராகி பயிருக்கு சேதம் ஏற்படும் என்பதால் ராமன் தினமும் ராகி பயிருக்கு காவல் இருந்து வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்துக்கு வழக்கம் போல் காவலுக்கு இருந்தவரை நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டுயானை ராகி பயிரை மிதித்து சேதப்படுத்தியது.
இதனை கண்ட ராமன் காட்டு யானையை விரட்ட முயன்ற போது யானை ராமனை துரத்தி சென்று தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். இது குறித்து ஆசனூர் போலீஸாருக்கும், தாளவாடி வனத்துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தும் வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வர தாமதமானதால் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாமல் அகழிகளை பெரிதாக வெட்ட வேண்டும் எனவும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.