திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எரியோடு அருகே உள்ள இ. சித்தூரில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபணி சாமுண்டீஸ்வரி திருக்கோயில் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் அமைந்துள்ள 36 அடி உயர சாமுண்டீஸ்வரி தேவிக்கு 108 சங்காபிஷேகமும், யாக வேள்வியும் செய்து திருவிழா தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூசாரி வீட்டிலிருந்து பண்டார பெட்டி அழைத்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து குதிரை வாகனத்திலும், பூங்கரகமாகவும் மேளதாளங்களுடன் காளியாட்டம், அர்த்தநாரீஸ்வர ஆட்டம், தப்பாட்டம் என உற்சாகத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. மேலும் பக்தர்கள் நேர்த்திகடனாக அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். இறுதியாக 15 நாள் கடும் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இத்திருக்கோவிலுக்கு எட்டுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை கோவில் பூசாரி வடிவேல் தலைமையில் எட்டுப்பட்டி ஊர் முக்கியஸ்தர்களும் செய்திருந்தனர்.